சென்னை: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த 14ஆம் தேதி, திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை DMK Files என்ற பெயரில் வெளியிட்டார். திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து அதிகளவு சொத்து சேர்த்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதேபோல் திமுக பிரமுகர்கள் பலரும் அண்ணாமலைக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். ஆனால், அண்ணாமலை தொடர்ந்து திமுகவினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக பிரமுகர்களின் சொத்துகள் குறித்து பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "உதயநிதியும் சபரீசனும் ஒரே வருடத்தில் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளனர். இப்போது அது பிரச்னையாகி வருகிறது. அந்த பணம் சிறுக சிறுக குவித்தது. தோராயமாக 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்" என்று பழனிவேல் தியாகராஜன் கூறுவதுபோல இருக்கிறது. இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுபோன்ற ஆதாரங்கள் தாங்கள் வெளியிட்ட திமுக சொத்துப்பட்டியலில் உள்ள கூற்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் அண்ணாமலையில் ஆதரவாளர்கள் சிலர், சில ஆண்டுகளுக்கு முன்பு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அதில், 2011-ல் திமுகவிடம் அதிகளவு பணம் இருந்தது என்று பழனிவேல் தியாகராஜன் குறிப்பிடுகிறார். இந்த வீடியோவுடன், இப்போது வெளியான ஆடியோவையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு விரைவில் நோட்டீஸ்.. திமுக எம்.பி.கனிமொழி அதிரடி!