தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவையில் ஆளுநரின் பொறுப்பு என்ன? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு! - speaker appavu

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர், உரையை வாசிப்பதற்கு மட்டும்தான் அவருக்கு அனுமதி, கடமை, பொறுப்பே தவிர, அதில் உள்ள கருத்துக்களுக்கு அமைச்சரவையும், முதலமைச்சரும் தான் பொறுப்பே தவிர, ஆளுநருக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை, என பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் பொறுப்பு என்ன? - விளக்கம் அளித்த அப்பாவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநரின் பொறுப்பு என்ன? - விளக்கம் அளித்த அப்பாவு

By

Published : Jan 12, 2023, 6:52 AM IST

சென்னை:தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை பேரவை மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேரவைத் தலைவர் அப்பாவு, 9-1-2023 அன்று பேரவையில் ஆளுநர் உரையின்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து தீர்ப்புரை அளித்தார்.

9-1-2023 அன்று பேரவையில் ஆளுநர் உரையின்போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து என்னுடைய தீர்ப்புரையை வழங்கிய பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 17-ல், “அரசமைப்புச் சட்டத்தின் 175 அல்லது 176-வது பிரிவின்படி, அவை கூடியிருக்கும்போது, ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, ஒழுங்கு பிரச்சினையினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது.அவ்வாறு தடங்கலோ, குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்கு பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பட்டு, அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவைத் தலைவரால் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்பெறும்” என உள்ளது.

விதிகளில் இடம் இல்லாதபோதிலும், கடந்த காலங்களில் நடைபெற்ற, ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வுகளின்படி எதிர்க்கட்சியிலே இருக்கின்ற கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் அல்லது கட்சிக்கு ஒருவர் என்கிற விதத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை முன்வைத்து, சிறிது நேரம் இருக்கையிலிருந்தவாறே தங்களது கருத்துகளை எடுத்து வைத்து, வெளிநடப்பு செய்வது மரபாக, ஜனநாயக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதை இப்பேரவையும் ஏற்றுக்கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன். 9-1-2023 அன்றுகூட இந்தியத் தேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கு.செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரு. சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, திரு. அப்துல் சமது, திரு.வேல்முருகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கையிலிருந்து வந்து, இங்கே பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன்னர் நின்றுகொண்டு, வேகமாகக் கோஷமிட்டனர்.

ஆளுநர் உரையாற்றுகையில், உறுப்பினர்கள் தங்களுடைய இருக்கைகளைவிட்டு ஆளுநர் இருக்கைக்கு முன்வந்து தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டு இருந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கோஷமிட்ட உறுப்பினர்களின் நியாயமான உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு, பேரவையின் தழைத்தோங்கி பெருமைப்படத்தக்க வகையில், அனைத்து பேரவைகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் வண்ணம் இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் நான் தீர்ப்பளிக்கின்றேன். இதையொட்டி (குறுக்கீடு) ஒரேயொரு நிமிடம் இருங்கள். இதுபோல் பல ஊடகங்கள், பத்திரிகைகள் உள்ளிட்ட எல்லோருமே ஏன் இதை அனுமதித்தார்கள் என்றுகூட சொல்லலாம். இதைத்தான் பேரவை விதி எண் 17-ல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆளுநருக்கு மட்டும்தான் மைக் இருக்கும். ஆளுநர் உரையாற்றும்போது, சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்கோ, முதலமைச்சர் அவர்களுக்கோ நிச்சயமாக யாருக்கும் மைக் இருக்காது. அவர்கள் நாகரீகம் கருதி சிலர் சில பிரச்சினைகளை எழுப்புவது வழக்கம் தான். ஒரு நிமிடம், இரண்டு நிமிடங்கள், 5 நிமிடங்களுக்குள் அவர்கள் அங்கிருந்து கடந்து சென்ற பின்பு, ஆளுநர் உரையைத் தொடங்குவார். இதுபோல பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ஆளுநரைப் பேசவிடாமல் தடுத்த வரலாறு:உதாரணத்திற்குச் சொன்னால், 18-1-1998-ல், அப்போது ஆளுநராக இருந்த செல்வி பாத்திமா பீவி அவர்கள் உரையாற்றுகையில், எதிர்க்கட்சி வரிசையிலிருந்த உறுப்பினர் திரு. தாமரைக்கனி அவர்கள் எழுந்துநின்று பேசி, அவர் சென்றுவிட்டார். அதன் பின்பு இருந்த உறுப்பினர் திரு. கருப்பசாமி, திரு. சுந்தரம் போன்றோர் இருக்கையின்மீது ஏறி நின்றுகொண்டு, வாயில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, பதாகையைக் காட்டி, எவ்வளவு பெரிய குழப்பம் செய்தார்கள் என்பதை நாடறியும்.

பலபேர் அதை மறந்தும் கூட இருக்கலாம். அதுமட்டுமல்ல, 7-1-2011 அன்று இதே எதிர்க்கட்சி வரிசையிலிருந்த பல பேர் காய்கறி மாலையோடு பேரவைக்கு வந்து, அப்போதைய ஆளுநர் திரு. சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எப்படிப்பட்ட தர்மசங்கடமான நிலைகளை எல்லாம் உருவாக்கி, ஆளுநரை பேசவிடாமல் தடுத்ததோடு, ஆளுநர் முன்பு அமர்ந்து தர்ணா செய்கின்ற நிலை ஏற்பட்டபோதுதான், அன்றைய பேரவைத் தலைவர் அவர்கள், அவர்களை வெளியேற்றும்படி அதாவது, பேரவை விதி 286-ல், விதிகளில் குறிப்பிடப்படாத விடுபெற்ற ஏதாவது நிகழ்வுகள் நடந்தால், பேரவைத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் அவ்வாறு நடைபெற்றது.

ஆகவே, இதை யாரும் மறந்துவிடக் கூடாது. ஆகவே, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்தான் நாங்கள் அமைதியாக இருந்தால், பேரவை விதி 17-ன்படி அடுத்த நாள் நடைபெறுகின்ற கூட்டத்தொடரில், அது நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருக்க வேண்டுமானால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நேற்று முன்தினம் நடந்த சம்பவம், தங்களது உள்ளத்திலிருந்த கருத்துகளை அவர்கள் பேசிவிட்டுச் சென்றார்களே தவிர, எந்தவிதமான அசம்பாவிதமோ அல்லது தரையில் அமர்ந்து தர்ணாவோ அல்லது இருக்கையின்மேல் நின்றுகொண்டு அல்லது ஏதேனும் அப்படிப்பட்ட தவறான நிகழ்வுகளிலோ அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்ற காரணத்தினால்தான் என்னுடைய தீர்ப்பை இந்தளவில் நான் நிறுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே, ஒருபோதும் ஆளுநர் பேசும்போது, அவர்களுக்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் இந்த அவை நடக்காது. அதற்கோர் உதாரணத்தைச் சொல்லி நான் நிறைவு செய்கிறேன்.விதி 92 (vii)-ல் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.குடியரசுத் தலைவர், ஆளுநர், உயர் நீதிமன்ற நீதியரசர்களுடைய தீர்ப்புகள் குறித்தோ அல்லது தம்முடைய பேச்சுக்கு வலு சேர்க்கும்வண்ணம் அவர்களுடைய பெயரை பயன்படுத்துகின்ற வண்ணமோ, அதைக் குறிப்பிட்டுப் பேசக்கூடாது என்று மிகத் தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த விதியைக்கூட 1995 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்தவர்கள் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியும், ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியும் என இரண்டு முறை பேரவை விதி 287-ஐ பயன்படுத்தி, 92 (vii) என்ற விதியைத் தளர்த்துவதற்காக ஒரு தீர்மானம் கொண்டுவந்து, அவையிலிருந்தவர்களில் நான்கில் மூன்று பங்கினர் அதை ஒத்துக்கொண்ட பிறகு, அதை ஏற்றுக்கொண்டு 92 (vii) என்ற விதியைத் தளர்த்தினார்கள்.

அவ்வாறு தளர்த்தி, அப்போதிருந்த ஆளுநர் திரு சென்னா ரெட்டி அவர்களுக்கெதிரான கருத்துகள் அவைக் குறிப்பிலே பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதை மீண்டும் சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால், அது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மறைந்த தலைவர் கலைஞர், 1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து, 1999 ஆம் ஆண்டு அவர் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது, அதாவது, மே மாதம் 19 ஆம் தேதி என்று நான் எண்ணுகின்றேன்.

மே மாதம் 19 ஆம் தேதியன்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ‘ஒருபோதும் குடியரசுத் தலைவர், ஆளுநர், நீதியரசர்களுக்கு விரோதமாக இந்த அவை பேசக்கூடாது, discuss செய்யக்கூடாது’ என்பதை உறுதிபடுத்தும்வண்ணமாக, 92 (vii)-ஐ தளர்த்துவதற்காக விதி 287-ஐ பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி ‘ஒருபோதும் அதைத் தளர்த்தக் கூடாது’ என்ற விதியைக் கொண்டுவந்து, இந்த அவையினுடைய மாண்பைக் காக்கும் வகையில், (மேசையைத் தட்டும் ஒலி) ஆளுநருக்கு எதிராகப் பேசுவதைத் தடுத்து நிறுத்தி, இன்றளவும் அது நடைமுறையில் இருக்கிறது.

அவ்வாறு சட்டமாக மாற்றித் தந்திருக்கிறார் மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள். அந்த வகையில்தான் கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் அவர்கள் உரையாற்றியபோது, அவர் பல விஷயங்களை வாசிக்காமல் கடந்து சென்றார்கள். பல விஷயங்களைப் புதிதாக அதனுள்ளே சேர்த்தார்கள். மிகத் தெளிவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் 175, 176-ன்படி, இந்த அவையில் உரையாற்ற ஆளுநருக்கு உரிமை கொடுத்திருக்கின்றது.

என்ன உரிமை கொடுத்திருக்கிறதென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 163 (1)-ன்படி அரசு, அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற ஒரு அரசு, பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசின் அமைச்சரவை, எவ்வாறு ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டுமென்று உரை தயார் செய்தனர்.அதை அமைச்சரவை ஒப்புதல் செய்து, ஆளுநருக்கு அனுப்பி, அதற்கு அவர்கள் இசைவு தெரிவித்தபின்பு, எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்து அவர்கள் கையொப்பமிட்டுக் கொடுத்தபின்பு, அந்த உரையை ஆளுநர் உரையாற்ற வரும்போது, இந்தப் பேரவை விதிகளுக்கோ, மாண்புக்கோ சற்றும் குறைபடாமல், அனைவரும் அவரை எழுந்து நின்று வரவேற்று, பேரவைத் தலைவர் மாடத்திற்கே சென்று, வரவேற்று, அழைத்து வந்து, இந்த அவையிலே அமர வைத்து, அவரே பேசுகிறார்.

என்னுடைய இருக்கையில் அவர்தான் இருப்பார். இங்கே அந்த அளவில் அவருக்கு அந்த மரியாதை கொடுத்து, அவரை இங்கே பேச வைக்கும்போது அவர்கள் உங்களுக்கே தெரியும், நான் மாண்புமிகு ஆளுநரைக் குறைவாகச் சொல்லவில்லை. அவர் பேசியதில் பல குளறுபடிகள் இருந்ததை நாம் எல்லோருமே அறிந்தோம். எதற்காக அப்படிச் செய்தார்களென்று தெரியவில்லை. ஆளுநர், உரையை வாசிப்பதற்கு மட்டும்தான் அவருக்கு அனுமதி, கடமை, பொறுப்பே தவிர, அதில் உள்ளே இருக்கின்ற கருத்துகளுக்கு அமைச்சரவையும், மாண்புமிகு முதலமைச்சரும்தான் பொறுப்பே தவிர, ஆளுநருக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை. கவர்னர் வாசித்து அளிப்பதோடு முடிந்து விட்டது அவருடைய கடமை. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனுடைய அருமை பெருமைகளையோ அல்லது அதனுடைய எதிர்க்கருத்து சொல்ல வேண்டுமென்றால், அரசைத்தான் சொல்வார்களே தவிர, ஆளுநர் செய்தார் என்று இதுவரையில் கேட்டதில்லை எனக் கூறினார்.

அப்படி ஒரு மரபும் இல்லை. நியமிக்கப்பட்ட ஒரு ஆளுநர்தான் அவர். ஆகவே, அந்த அளவில் அவர் அதைக் கடந்து சென்றதால் ஒரு அசாதாரண சூழல் ஏற்படுகிறது. அந்த அசாதாரண சூழலில்தான் அவர் பேசி அமர்ந்த பின்பு, பெரும் கண்ணியத்தோடு, அதற்கிடையில் பல பத்திகள் வாசிக்கப்படவில்லை. பல பத்திகள் புதிதாகப் புகுத்தப்பட்டபோதுகூட பல பேர்கள் சிறு சலசலப்பு வந்தபோதுகூட, முதலமைச்சர் திரும்பிப் பார்த்து அனைவரையும் அமைதிப்படுத்தி, இந்த சபையின் மாண்புக்கு ஒரு சிறு இடையூறுகூட வரக்கூடாது என்பதற்காக அமைதி காத்து, அதன்பின் பேரவை விதி 17-ஐத் தளர்த்த, என்னிடம் ஓர் அனுமதியைக் கேட்டார்.

அமைச்சரவைகூட, முடிவெடுத்து, மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி, அவர் ஒப்புக்கொண்ட பதிவுகளை அச்சிடப்பட்ட புத்தகமாகவும், கணினியிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் வழங்குகின்றோம். விதியைத் தளர்த்தவும், அவற்றைப் பதிவு செய்வதற்கும் எனக்கு அனுமதி தாருங்கள் என்று மிகப் பெரிய கண்ணியத்தோடு அந்த வாய்ப்பைக் கேட்டார்கள்.நான் அந்த வாய்ப்பைக் கொடுத்தேன். இந்தப் பேரவையில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்னும் சொல்லப்போனால், அவையிலிருந்தவர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டபின்தான், அவைக் குறிப்புகளில் இடம் பெற்றிருக்கிறது. பல பேர் கேட்கலாம், என்ன அவசரமென்று.

மிக மதிநுட்பத்தோடு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அந்த இடத்தில், அந்த நிமிடத்தில் அந்த முடிவெடுக்கவில்லையென்றால், அனைத்து ஊடகங்களும் அனைத்து பத்திரிகைகளும் உலகம் முழுமைக்கும் அவற்றைப் பரப்பிவிடுவார்கள். அதை வெளிப்படுத்தி விடுவார்கள். ஆகவேதான் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியது இந்த அரசல்ல. இந்த அவை அல்ல. ஆளுநர் அவர்கள் பேசும்போது அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஆனால், மதிநுட்பத்தோடு அதை மிகத் துல்லியமாக, அந்த நேரத்திலே மாண்புமிகு முதல்வர் அவர்கள் தீர்மானம் கொண்டு வந்த காரணத்தால்தான் இந்தச் சட்டமன்றத்தினுடைய மாண்பு காப்பாற்றப்பட்டு விட்டது என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன். இந்தியாவிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுடைய உரிமை எது, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சட்டமன்றம் நடந்து முடிந்த ஆளுநர் உரையிலே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம்தான் இன்று இந்திய அளவில் பேசப்படுகின்ற மிக முக்கியமான ஒரு பொருளாக இருக்கின்றது என்பதையும் நாம் யாரும் மறந்துவிட முடியாது.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், இந்தியாவில் கோட்டையிலே கொடி ஏற்றுவது ஆளுநர் என்ற நிலையை மாற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஏற்ற வேண்டுமென்று சொல்லி, இந்தியாவிற்கு எவ்வாறு பெருமை சேர்த்து, இன்றைக்கும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுகின்றோமோ, அதே நிலையைத்தான், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தியா முழுவதும் இருக்கின்ற அனைத்து சட்டமன்றங்களிலும் ஆளுநர் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்பதை வரையறுத்துக் காட்டி, இந்தத் தமிழ்நாட்டினுடைய சட்டமன்ற மாண்பு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சட்டமன்ற மாண்பையும் மிகச் சிறப்பாகக் காப்பாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்தப் பேரவை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

இந்த அளவில், இப்போது வெளிநடப்பு செய்திருக்கின்றவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். தயவு செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையை நிலையை நீங்கள் புரிந்து, தெரிந்து, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு அவையிலே அமர வேண்டுமென்று நான் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

அதுபோல்தான், இப்போது இந்தத் தீர்மானத்தின் மீது பேச வருகின்றவர்களும், மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தெரிவித்தபடி, பேரவை விதி 92(vii)-க்கு மாறாகப் பேசக்கூடாது என்பதை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், நான் இந்த அளவில் எல்லோருடைய கவனத்திற்கும் எடுத்துச் சொல்கின்றேன்.தயவு செய்து, நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். நடந்ததை முதலமைச்சர் அவர்கள் பேரவைக்கு மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு ஒட்டுமொத்தமாக, அவருடைய துணிவை பாராட்டிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க:MRB Nurses:"சுமார் 15,000 செவிலியர்களுக்கு சொந்த ஊர்களில் பணி" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ABOUT THE AUTHOR

...view details