சென்னை : தமிழக சட்டப் பேரவை இன்று (அக். 9) திங்கட்கிழமை கூடுகிறது. காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இன்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப் பேரவை கூட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலில், முன்னாள் உறுப்பினா்கள் இ.ஏ.லியாவுதீன் சேட், கே.பழனியம்மாள், வெ.அ.ஆண்டமுத்து ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. மேலும், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ப.சபாநாயகம், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கும் அவையில் இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட உள்ளது.
தொடா்ந்து, கேள்வி பதில் நேரம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, நிகழாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளை நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளாா். கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை தாக்கலுக்குப் பிறகு, மிக முக்கியமான அரசினா் தனித் தீா்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளாா்.
தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை பேரவை வலியுறுத்தும் தீா்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார்.