சென்னையில் கரோனாவின் பாதிப்பு குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கடந்த சில நாள்களாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி (12 நாள்கள்) முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் பகுதிகள் எவையெவை?
- பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்
- திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்: திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகள், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் ஆகிய ஊராட்சிய ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்: செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும்
மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு 2 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே சென்று அத்தியாவசியப் பொருள்களை வாங்க வேண்டும். குறிப்பாக, வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
மேற்கண்ட பகுதிகளில் இருக்கும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும். இதுதவிர அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்.
கட்டுப்பாடுகளுடன் எவையெவை இயங்கும்?
- மளிகைக் கடைகள், காய்கறி மற்றும் பழக்கடைகள், காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நடமாடும் கடைகள் பெட்ரோல் பங்குகள் ஆகியவை தகுந்த இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. தொலைபேசி மூலம் உணவு ஆர்டர் செய்துகொள்ளலாம்
- அம்மா உணவகங்கள், ஆதரவற்றோருக்காக அரசால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்
- நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்
- முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர்/ நோயாளிகள் ஆகியோருக்கு உதவி செய்பவர்களுக்கு அனுமதி
- தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் பொதுமக்களுக்கு உதவிசெய்யலாம்
- பணியிட வளாகத்தில் தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணிக்கு அனுமதி
- தொழிலாளர்களுக்கு ஒருமுறை தொற்று பரிசோதனை செய்து, தொழிற்சாலை வளாகத்திலோ, அதன் அருகே உள்ள பகுதிகளிலோ தங்கவைத்து பணிபுரிய வைக்க அனுமதி
- திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக மற்ற மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் தகுந்த ஆதாரங்களைச் சமர்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும்
- மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகளுக்கு அனுமதி
- வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் ஆகியவற்றை அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் இயக்கிக்கொள்ளலாம்.
- மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படும். இவற்றில் அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளும் துறை சார்ந்த அலுவலகங்கள் மட்டும் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்
- வங்கிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜூன் 29, 30 ஆகிய இரு நாள்களில் மட்டும் வங்கிகள் 33 விழுக்காடு பணியாளர்களோடு செயல்படும். ஏடிஎம் வழக்கம்போல் செயல்படும்
- அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், நீதித்துறை, நீதிமன்றங்கள்
- சரக்குப் போக்குவரத்து, அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்லும் வாகங்களுக்குத் தடை இல்லை
- வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற ரயில்கள், விமானங்கள் ஆகியவற்றிற்குத் தற்போதைய நடைமுறை தொடரும்
மேற்குறிப்பிட்ட தளர்வுகளின்றி ஜூன் 21, ஜூன் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த இரு தினங்களில் பால் விநியோகம், அவசர மருத்துவப் பணிகள் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை.
முழு ஊரடங்கில் இயங்காதவை எவையெவை?
- கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இப்பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிசெய்யும்
- டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது
- தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது
- தினந்தோறும் வீட்டிலிருந்து தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதி இல்லை
- ரேஷன் கடைகள் எதுவும் இயங்காது. இப்பதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள் அப்பகுதிகளிலுள்ள ரேஷன் கடைப் பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்