தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

EWS 10% இட ஒதுக்கீடு: வரும் நவ.12-ல் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக்கூட்டம் - தமிழ்நாடு அனைத்து கட்சி கூட்டம்

உயர்சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, வரும் நவ.12ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 8, 2022, 3:24 PM IST

சென்னை: உயர் சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 % இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உயர் சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிப்பதற்கு வழிவகை செய்யும் அரசியல் சட்டத்திருத்தம், கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 7.11.2022 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக்கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித்தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வரும் நவ.12ஆம் தேதி, காலை 10.30 மணியளவில், சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக்கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details