மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினர் ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாத்தை சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
விமான நிலையம் வந்த அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் பேசியவற்றின் தொகுப்பு இதோ...
ஆர்.எஸ். பாரதி (திமுக அமைப்புச் செயலாளர்):
'அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டு ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். ஒன்றிய அரசிடம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே செல்கிறோம்; நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து கோரிக்கைகளையும் எடுத்து வைக்கிறோம்.
திமுகவின் ஒத்தக்கருத்து மட்டும் இல்லாமல் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி அனைத்துத் தரப்பினர் கருத்தையும் கேட்டு, தற்போது டெல்லி செல்கிறோம். அணை விவகாரத்தில் சட்டப்பாதுகாப்பு இருந்தாலும்கூட படிப்படியாக கோரிக்கைகளை எடுத்து வைப்போம்.
அதன் முதல் கட்டமாக மேகதாது அணை விஷயத்தில் ஒன்றிய அரசை சந்தித்து கோரிக்கையை எடுத்து வைக்க உள்ளோம்' என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கோபண்ணா (காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்):
'கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட இருக்கிறது. அதனைத் தடுக்கும் வகையில் நாங்கள் மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்திக்க இருக்கின்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் தமிழ்நாடே ஒன்றுபட்டு நிற்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
அணை கட்டினால் காவிரியில் நாம் பெறக்கூடிய நீரின் அளவு மிகவும் பாதிக்கப்படும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைக்காது.
டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்படும். இதனால் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் டெல்லிக்குச் செல்கிறோம். இதன்மூலம் மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துவோம்' என கோபண்ணா கூறினார்.
பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்):
'கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிப்பதை தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் எதிர்க்கிறோம். இரண்டு மாநில அரசுகள் பிரச்னை என்பதால், ஒன்றிய அரசு அரசியல் சார்புடன் செயல்படக் கூடாது. நியாயமாக நடக்கும் என்று நம்புவோமாக' என்றார், பாலகிருஷ்ணன்.
ஜி.கே. மணி (பாமக தலைவர்):
'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பிடிவாதம் செய்வது தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையைத் தட்டிப் பறிக்கின்ற செயல். இதனால் தமிழ்நாட்டில் இருந்து அனைத்துக் கட்சியைச் சேர்ந்த குழுவினர் டெல்லி சென்று நடுவர் மன்றம் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்த இருக்கிறோம்.
இதன்மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒரே குரலாக ஒலிக்க இருக்கின்றோம். கர்நாடக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்; மத்திய அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இந்த பயணத்தின் குறிக்கோளாகும்.
மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் தமிழ்நாட்டிற்கு நீர் வரத்து கிடைக்காது. சென்னை உட்பட 25 மாவட்டங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும். பாசன வசதிகளும் தடைபடும். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் நீர் பஞ்சம் ஏற்பட்டு உணவு பஞ்சம் ஏற்படும்' என்றார், ஜி.கே.மணி.