சென்னை: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 15வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”நேற்று ஒரே நாளில் 1,97,009 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 84.26% முதல் தவணையும் 54.73% இரண்டாம் தவணையும் செலுத்திக்கொண்டுள்ளனர் .
இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 8,04,61,787 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
பிரதமரின் தமிழ்நாடு வருகை
மேலும்,”தமிழ்நாட்டில் 11 மருத்துவக்கல்லூரிகளின் திறப்பு விழா நிகழ்ச்சி ஜனவரி 12ல் நடைபெற உள்ளது. பிரதமரும் , முதலமைச்சரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்கள் மற்றும் நிர்வாகம் ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 6958 MBBS இடங்களுக்கும் 1925 BDS இடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக மாணவர்களிடம் இருந்து நாளை காலை 10 மணி முதல் பெறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2286 ஆரம்பசுகாதார நிலையங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றார்.
மேலும், ”மக்களை தேடி மருத்தும் திட்டத்தின் கீழ் தற்காலிக செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் அவர்களுக்கு மதிப்பெண் கல்வி உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து மதிப்பெண் வழங்கப்படும் கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.
69% இட ஒதுக்கீட்டின் படி 7,296 பணியிடங்களும் நியமிக்கப்பட்ட பின் வெளிப்படையாக ஒவ்வொரு சமூகத்திலும் எவ்வளவு பேர் இந்த தற்காலிக பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்ற விவரம் இட ஒதுக்கீட்டிற்குப் பாதகம் வராமல் நியமிக்கப்பட்ட பின் பட்டியல் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார் .