தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கலைஞர்களின் பிரதிநிதிகள் சந்திப்பு, இணையத்தில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
இதில் நாட்டுப்புற கலைஞர்களின் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:
- ”தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மொத்தம் 17 லட்சம் பேர் உள்ளனர். 1,024 கலைகள் உள்ளன இதில் 132 சங்கங்கள் உள்ளன.
- தற்போது கரோனா ஊரடங்கால் பெரும்பான்மையான நாட்டுப்புறக் கலைஞர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். நாட்டுப்புறக் கலைஞர்கள் கோடைக் காலத்தில் தான் அதிக அளவிலான கோயில் நிகழ்ச்சிகள், தெருக்கூத்துகள், நாடகங்கள் மூலமாக வருமானம் ஈட்டி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் அரசு அறிவித்த ஊரடங்கில் நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரம் மிக மோசமாகிவிட்டது. அடுத்தக்கட்ட நகர்வு கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அரசின் உதவித்தொகை போதவில்லை. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும்.
- நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் மூன்றாயிரமாக உயர்த்தப்பட வேண்டும். மேலும் ஊரடங்கிற்கிப் பிறகு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கோயில் நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகங்கள், தெருக்கூத்துக்கள் போன்றவற்றை நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும்.
- மேலும் இந்தக் கரோனா காலத்தில் நாட்டுப்புறக் கலைகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். இதனால் நாட்டுப்புறக் கலைஞர்களை முன்களப் பணியாளராக அறிவிக்க வேண்டும். இதன் மூலமாக நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கை தரம் மேம்படும்.
- அதேபோல் ஓய்வூதியம் பெறுவோரின் வயது பெண்களுக்கு 48 வயதாகவும், ஆண்களுக்கு 58 வயதாகவும் உயர்த்தப்பட வேண்டும்.
- அரசு கொடுக்கும் ஓய்வு ஊதியத்தைப் பெறுவதில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பல்வேறு சிக்கல்களை அலுவலர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனால் ஓய்வூதியம் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். அதேபோல் பள்ளிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களை ஆசிரியராக நியமித்து மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளைப் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
- கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் இயங்காமல் உள்ளது. அதை மீண்டும் அரசு செயல்படுத்த வேண்டும். மாவட்டம்தோறும் தலைமை அலுவலகங்கள் அமைக்க வேண்டும். கலை மற்றும் இயல், இசை, நாடக மன்றத்தில் உள்ளவர்களையும் நல வாரியத்தில் சேர்த்திட வேண்டும். அதேபோல் ஆண்டுதோறும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சார்பாக இந்தக் காணொலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு நன்றிகளைத் தெரிவித்த தமிழ் பண்பாட்டு மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடர்ந்து பேசியதாவது:
”இந்த நிகழ்ச்சி மூலம் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை நேரிடையாகக் கேட்டறிந்து உள்ளேன். தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலத்தில் பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தத் தொற்று காலத்தில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு நிச்சயமாக எடுத்து வருகிறது. தற்போது நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தில் நடைமுறையில் உள்ள சிக்கல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.