சென்னை:தமிழ் திரைப்படத்துறையைப் பொறுத்தவரை தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், சினிமா தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 24 தொழிலாளர் சங்கங்கள் உள்ளன. இதில் டப்பிங் யூனியன் எனப்படும் திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்கமும் ஒன்றாக அங்கம் வகிக்கிறது. இந்த பழமை வாய்ந்த டப்பிங் சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த டப்பிங் சங்கத்தின் தேர்தலில், ராதாரவி போட்டியின்றி வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரம் இந்த தேர்தலில் ராதாரவியை எதிர்த்து பின்னணி பாடகி சின்மயி போட்டியிட்டார். ஆனால், அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராதாரவி போட்டியின்றி தலைவராக தேர்வானார்.
அதுமட்டுமல்லாமல் ராதாரவி தலைமையில் போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர். இதன் அடிப்படையில் தற்போது டப்பிங் சங்கத்தின் செயலாளராக கதிரவன், பொருளாளராக சீனிவாசமூர்த்தி மற்றும் துணைத் தலைவர்களாக நாராயண பாபு, செல்வராஜ், வீரமணி ஆகியோர் உள்ளனர். இந்த சங்கத்தின் கட்டட அலுவலகம், சென்னை சாலிகிராமம் 80அடி சாலையில் இயங்கி வந்தது.
இந்த கட்டடமானது கடந்த 2011ஆம் ஆண்டு வாங்கப்பட்டு, அங்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. சுமார் 75 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார் குறித்து மாநகராட்சி சார்பில் டப்பிங் யூனியன் சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கட்டடத்தை சீல் வைக்கப் போவதாகவும் மாநகராட்சி தரப்பில் டப்பிங் யூனியன் சங்கத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.