சென்னை:இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யை வைத்து தனது புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்து அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் விஜய், வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அதிநவீன கேமரா மூலம் விஜய்யின் தோற்றம் உருவாக்கப்படுகிறது. இதனை வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய்யின் புகைப்படத்தைப் பகிர்ந்து எதிர்கால உலகிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SK-21 முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு:நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK-21 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் மாவீரன் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் இதுவாகும். ராணுவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாகக் காஷ்மீரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை திரும்பியுள்ளார். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - இன்வேனியோ ஃபிலிமிஸ் பிரம்மாண்டக் கூட்டணியில் 4 புதிய படங்கள்:ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் இன்வேனியோ ஃபிலிம்ஸ் இணைந்து 4 புதிய திரைப்படங்களைத் தயாரிக்கவுள்ளனர். இது குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன.
வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு:இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு 'மகா கவிதை' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தற்போது அதற்கான நூலின் தலைப்பும் முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன.கவிஞர் வைரமுத்துவின் 39-வது படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும்.
நிலம் - நீர் - தீ - வளி - வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்த கவிதையாக 'மகா கவிதை' அறியப்படுகிறது. தமிழில் இந்தவகை இலக்கியத்தில் இதற்குமுன் இல்லாத புது முயற்சி என்று சொல்லலாம்.
சூர்யா பதிப்பகம் நூலைத் தீவிரமாகத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. சில மாதங்களில் நூல் வெளியிடப்படும் என்று கவிஞர் வைரமுத்து அலுவலகம் தெரிவிக்கிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிடும் அடுத்த வெப் சீரிஸ்:இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ஶ்ரீதர்.K இயக்கத்தில், தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஒரிஜினல் வெப் சீரிஸான 'பாராசூட்' சீரிஸை அறிவித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும்.
இதில் நடிகர் ஷாம், கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மூவருடன், திறமை வாய்ந்த குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பாவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.
இதையும் படிங்க:குஷி படத்தால் குஷியாக இருக்கும் விஜய் தேவரகொண்டா.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ