சென்னை: தமிழ்நாடு அரசியலில் தேசிய அரசியல் ஓங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திராவிட கட்சிகள் வந்து அனைத்தையும் அணைத்து போட்டன. தேசிய கட்சிகளின் வரலாறுக்கு முடிவுரை எழுதி திராவிட கட்சிகள் புதிய வரலாறை எழுதின. அந்த வரலாற்று காலத்தில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்தவர் விஜயராஜ். அந்த விஜயராஜ் விஜயகாந்த் எனும் நடிகராக மாறி கிராமத்து மண்வாசனையை பற்றி பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் கொடி உயர பறந்தபோது நடிகராக எப்படி தைரியமாக உள்ளே நுழைந்து தன்னை நிரூபித்தாரோ அதேபோல் அரசியல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேரின் கொடி பறந்தபோது உள்ளே நுழைந்தார். அரசியல் களத்துக்குள் நுழைவது எளிது ஆனால் முதல் சட்டப்பேரவை தேர்தலை தனித்து எதிர்க்கொள்வது கடினம். அதனை விஜயகாந்த் செய்தார்.
விருத்தாசலத்தில் 2006 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அவர் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தமிழ்நாடு வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த தேர்தலில் இருந்து விஜயகாந்த் தவிர்க்க முடியாதவராக மாற ஆரம்பித்தார்.2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடை 5 முறை ஆட்சி செய்த கருணாநிதி பழம் நழுவி பாலில் விழும் தருவாயில் இருக்கிறது என்றார். அதுதான் விஜயகாந்த் தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாதவராக இருந்தார் என்பதற்கு உதாரணம்.
ஆனால் விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் களமிறங்கி வென்ற அவர் தன்னுடைய சகாக்களையும் எம்.எல்.ஏக்களாக வெல்ல வைத்து சட்டப்பேரவைக்குள் அழைத்து சென்று தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தார். விஜயகாந்த் நெருக்கமாக இருந்த கருணாநிதியோ மூன்றாவது கட்சியின் பிரதிநிதியாக அமர்ந்திருந்தார்.
ஜெவுடன் கூட்டணி வைத்ததால் அவர் என்ன செய்தாலும் விஜயகாந்த் அடிமையாக இருப்பார் என்று பலரும் பேசினர். ஆனால் விஜயகாந்த் செய்தது வேறு. தனக்கும் தன் கட்சி சகாக்களுக்கும் சுயமரியாதை குறைந்ததால் ஜெயலலிதாவை வைத்துக்கொண்டே தனது நாக்கை துருத்தி அரட்டி அமர வைத்தார். அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது. ஏனெனில் ஜெ அதிகாரத்தில் இருக்கும்போது அப்படி செய்தவர் எவரும் இல்லை.