சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று (டிச.12) காலை சுமார் 6.10 மணியளவில், புறநகர் மின்சார ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், மீனம்பாக்கம் - திரிசூலம் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாம்பரம் ரயில்வே அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக தாம்பரத்திலிருந்து ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் தாமதமாகவும், விரிசல் ஏற்பட்ட காரணத்தால் மெதுவாகவும் இயக்கப்பட்டன. இதனால் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும், விரிசலை சீர் செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு, ரயில் சேவை சீராகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது. முன்னதாக, நேற்று (டிச.11) செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டதன் காரணமாக, செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:பார்முலா 4 கார்பந்தயம் வரையறுக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வருமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி?