தாம்பரம்: புத்தாண்டை ஒட்டி, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'புத்தாண்டு அன்று பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாட வேண்டும். புத்தாண்டு அன்று மாலை முதல் தாம்பரம் மாநகரத்தில் சுமார் 3,500 காவல்துறையினர், 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணி, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேம்பாலத்தினை புத்தாண்டு அன்று இரவு உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள். அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும். விபத்துக்களைத் தவிர்க்கவும் உயிர்ச் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது. நீச்சல் குளம் மற்றும் மொட்டை மாடியில் எந்த நிகழ்ச்சியும் நடத்த அனுமதிக்கக் கூடாது' என தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: QR Code-ஐ ஸ்கேன் செய்தால் கார் வரும் - போதையில் இருப்பவர்களுக்காக ஏற்பாடு