தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாடலை பின்பற்றும் தாம்பரம் மாநகராட்சி.. சீக்ரெட்டை உடைத்த மாநகராட்சி ஆணையர்!

தாம்பரம் மாநகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது தொடர்பாக ஆய்வு செய்து அதற்கான புணரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

கவனிப்பாரற்று தவிக்கும் தாம்பரம் பூங்காக்கள்.. கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.. மாநகராட்சி ஆணையரின் பதில் என்ன?
கவனிப்பாரற்று தவிக்கும் தாம்பரம் பூங்காக்கள்.. கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.. மாநகராட்சி ஆணையரின் பதில் என்ன?

By

Published : Feb 28, 2023, 12:33 PM IST

தாம்பரம் மாநகராட்சி பூங்காக்கள் பற்றிய சிறப்பு தொகுப்பு

சென்னை:சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் சுமார் 209 பூங்காக்கள் உள்ளன. இதனை பொதுமக்கள் பொழுதுபோக்குக்காகவும், உடற்பயிற்சிக்காகவும், விளையாடுவதற்காகவும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு செய்யப்படாமல் சீரழிந்து கிடக்கின்றன.

குறிப்பாக தாம்பரம் மாநகராட்சியின் கீழ் உள்ள அனைத்து பூங்காக்களும் செடி, கொடிகள் வளர்ந்து புதராக மாறிவிட்டன. அதிலும் ஒரு சில பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொழுதுபோக்கிற்கு பூங்காக்கள் சரியாக இல்லாததால் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

ரூ.47 லட்சம் நிதி?இது தொடர்பாக சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கூறுகையில், “எங்கள் பகுதியில் உள்ள பாரத் அவென்யூ பூங்கா, குமார் அவென்யூ பூங்கா, எஸ்பிஐ காலனி பூங்கா, ஜோதி நகர் பூங்கா மற்றும் பாபு தெரு பூங்கா ஆகியவை கரோனா காலகட்டத்திற்கு பிறகு பராமரிக்கப்படவில்லை.

இந்த பூங்காக்களைத்தான் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பயன்படுத்தி வந்தனர். இந்தப் பூங்காக்களை பராமரிக்க சிட்லப்பாக்கம் ஊராட்சியாக இருந்தபோது 47 லட்சம் ரூபாய் நிதி கோரப்பட்டது. ஆனால், பின்னர் தாம்பரம் மாநகராட்சி தரம் உயர்ந்த பின், இந்த பூங்காக்கள் சீரமைக்கப்படும் என நம்பி இருந்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சின.

அனைத்து பூங்காக்களிலும் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, நடைபாதைகள் பெயர்ந்துள்ளன. இதனால் யாரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது. மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு 18 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பராமரிப்பு பணியும் தொடங்கப்படவே இல்லை.

எனவே புதிதாக பதவி ஏற்றுள்ள மாநகராட்சி ஆணையர், அனைத்து பூங்காக்களையும் பராமரித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். மேலும் அஸ்தினாபுரம் பகுதிகளில் புதிதாக இரண்டு பூங்காக்கள் கட்டப்பட்டு திறக்கப்படாமலே உள்ளது. அதனையும் உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட வேண்டும். அதேபோல் தாம்பரம் மாநகராட்சி முழுவதும் 12 இடங்களில் நகர்புற மக்கள் நல வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. அதுவும் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதனையும் அதிகாரிகள் உடனடியாக திறக்க வேண்டும்" என தெரிவித்தார்.

டெண்டர் நிறுத்தப்பட்டதா?சமூக ஆர்வலர் சந்தானம் கூறுகையில், "மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் அழிந்து விட்டன. பல்லாவரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட பூங்காக்கள் பராமரிப்பு இல்லாமல் புதர்களாக மாறி உள்ளன.

பல லட்சங்களை செலவழித்து புதிய பூங்காக்களை உருவாக்கும் மாநகராட்சி, அதை ஏன் பராமரிக்க முன் வருவதில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பராமரிப்பு பணிக்காக டெண்டர் விட்டால் அதிக பணம் செலவாகும் என்பதால் மாநகராட்சி டெண்டர் விடாமல் நிறுத்தி வைத்துள்ளது.

ஒரு சில பூங்காக்களை மட்டும் குடியிருப்பு நல சங்கத்தினர் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். மேலும் குரோம்பேட்டை நியூ காலனி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு பூங்கா கூட இதுவரை மாநகராட்சி அமைத்து தரவில்லை. இங்கிருக்கும் மக்கள் பொழுதுபோக்குகு என்ன செய்வார்கள்? அதிகாரிகள் உடனடியாக பராமரிப்பின்றி உள்ள அனைத்து பூங்காக்களையும் சரி செய்தும், பூங்காக்கள் இல்லாத இடத்தில் புதிய பூங்காக்களை கட்டிக் கொடுக்கவும் வேண்டும்" என்றார்.

சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு: பம்மலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாரியப்பன், "மாநகராட்சிக்குட்பட்ட சங்கர் நகர் குடியிருப்பு பகுதிகளில் சில வருடங்களுக்கு முன்பு மூன்று இடங்களில் புதிய பூங்காக்கள் கட்டுவதற்கு இடங்களை மட்டும் தேர்வு செய்தனர். ஆனால் இதுவரையிலும், அங்கு எந்த ஒரு புதிய பூங்காக்களும் கட்டப்படவில்லை.

இது குறித்து நகராட்சியாக இருந்தபோதில் இருந்தே நாங்கள் புகார் அளித்து வருகிறோம். ஆனால் இப்போது மாநகராட்சி ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிதாக அந்த பகுதியில் பூங்காக்கள் கட்டுவதற்கு சிஎம்டிஏவில் (CMDA) இருந்து நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் இதுவரையும் புதிதாக எந்த ஒரு பூங்காக்களையும் கட்டவே இல்லை. மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் நடவடிக்கை மேற்கொண்டு புதிய பூங்காவை கட்டிக் கொடுக்க வேண்டும்" என கூறினார்.

13 பூங்காக்கள் முட்புதராக உள்ளது: மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சீதாராமன் கூறுகையில், "தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூங்காக்கள் கடந்த மூன்று வருடங்களாக பராமரிப்பின்றி நாசமாகியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி தரப்பில், ஒரு சின்ன வேலைகள் கூட பூங்காக்களில் செய்யவில்லை. செம்பாக்கம், மாடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அஞ்சுகம் பூங்கா, சரஸ்வதி பூங்கா மற்றும் எம்ஜிஆர் பூங்கா என 13 பூங்காக்கள் பராமரிப்பு இல்லாமல் ஏதோ முட்புதர்கள்போல் காட்சியளிக்கின்றன.

அனைத்து பூங்காக்களிலும் மின்விளக்குகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை உடைந்து மாடுகள் தங்கும் கூடாரமாக மாறி உள்ளது. மேலும் விஷப் பூச்சிகள் அதிகம் உள்ளது. இதனால் அந்த சிறுவர்கள் யாரும் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. அதேபோல் சில பூங்காவின் உள்குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் பூங்காவில் ஓடுகிறது.

மாநகராட்சி பூங்கா பராமரிப்பு குறித்து டெண்டர் விடுவதையும் அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் இது குறித்து கேட்டால் மூடி மறைக்கின்றனர். எனவே பூங்காக்கள் அனைத்தையும் முறையாக பராமரித்து புதிய பொருட்களை பொருத்த வேண்டும். மேலும் பூங்காக்களுக்கு காவலாளிகளை பணியமற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

சென்னை மாடல்தான் இனி தாம்பரம் மாடல்:இது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனாவை ஈடிவி பாரத் செய்திகள் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "நான் தற்போதுதான் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பதவி ஏற்றுள்ளேன். அனைத்து பூங்காக்களையும் சென்று ஆய்வு செய்து வருகிறேன். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அனைத்து பூங்காக்களையும் பராமரிப்பதற்கான பணியை தொடங்க உள்ளேன். இதற்கு முன்னால் தாம்பரம் மாநகராட்சியில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

நான் சென்னை மாநகராட்சியில் பின்பற்றப்படும் மாடலைத்தான் தாம்பரம் மாநகராட்சியில் செயல்படுத்த உள்ளேன். விரைவில் இதற்கான பணிகளைச் செய்ய உள்ளேன். மேலும் புதிய திட்டங்கள் ஏதாவது கொண்டு வருவது பற்றியும் ஆய்வு செய்து வருகிறேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க:உங்கள் இல்ல நிகழ்வுகளில் உணவு மீதம் ஆகிறதா? - காவல் கரங்கள் காத்திருக்கிறார்கள்!

ABOUT THE AUTHOR

...view details