சென்னை: தாம்பரம் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் இன்று (மார்ச் 27) மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, மேயர் வசந்தகுமாரியிடம் நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் பட்ஜெட்டுக்கான ஆவணங்களை வழங்கினர். அப்போது துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா உடன் இருந்தனர்.
அந்த வகையில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் வாசித்த நிதிநிலை அறிக்கையில், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர், தெரு விளக்கு, மழை நீர் வடிகால், குடிசைப் பகுதிகள் மேம்பாடு ஆகியவற்றிக்காக 2023-24 வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வரவு ரூ. 702.23 கோடி, அதில் செலவு ரூ.671.53 கோடி, உபரி ரூ.30.70 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தாம்பரம் மாநகராட்சி மட்டுமல்லாமல், அதனை சுற்றி உள்ள கிராமங்களையும் சேர்த்து ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம், கழிவு நீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் என பல்வேறு திட்டங்களை தயாரித்து அதனை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
அத்துடன் மாநகராட்சி கட்டடங்கள், மாநகராட்சி முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் குப்பைகளை தரம் பணிக்கு தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணம் வாங்குதல், புதிதாக இயங்கு ஊர்தி வாகனங்கள் வாங்குதல், தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு புதிய LED விளக்குகள் பொருத்துவதற்கும், பழுதடைந்து உள்ள LED விளக்குகளை மாற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய குடிநீர் தொட்டிகள், பாதாள சாக்கடை பணிகள், ஆழ்துளை மற்றும் கைப்பம்பு பணிகள், மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள், ஸ்மார்ட் வகுப்புகள், நூலகங்கள், சுகாதாரமான நவீன வசதிகள் உடன் கூடிய கழிப்பறைகள், இதர பராமரிப்பு பணிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் நகர்ப்புற ஏழை, மக்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, பாதாள சாக்கடை வசதி, திரைக்கழிவு மேலாண்மை வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் மொத்த வருவாயில் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல தாம்பரம் மாநகராட்சி மற்றும் அதன் உடன் இணைக்கப்பட்டு உள்ள ஊரக பஞ்சாயத்துகளுக்கும் சேர்த்து குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்களை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்தவும் விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.