தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கமிஷன் வாங்குவதில் தாம்பரம் மாநகராட்சி நம்பர் ஒன்றாக உள்ளது - அதிமுகவினர் குற்றச்சாட்டு

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களை திமுக அரசு சரியாக பராமரிக்கவில்லை, அதே நேரத்தில் மாநகரட்சி பணிகளையும் முறையாக செய்யப்படவில்லை. தாம்பரம் மாநகராட்சியின் போக்கை கண்டித்து இன்னும் ஒரு வார காலத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

tambaram corporation
தாம்பரம் மாநராட்சி

By

Published : Jun 16, 2023, 12:29 PM IST

சென்னை:தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று (ஜூன் 15) நடைபெற்றது. இதில் தாம்பரம் மாநகராட்சியின் 70 மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர், துணை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் வார்டில் எந்த ஒரு மக்கள் பணியும் முடிக்கப்படாமல் கிடப்பில் இருப்பதாகவும், பலமுறை இது குறித்து மாநகராட்சி மேயரிடமும், ஆணையரிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் முறையாக செயல்படவில்லை எனவும், அங்கே தரமற்ற உணவுகள் சமைப்பதாகவும், பொருட்களை முறையாக வழங்காமல் இருப்பதாகவும், இதனால் அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்கள் உணவு அருந்த முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆனால், இதற்கு முறையாக மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் எந்த ஒரு பதிலும் அளிக்காததாக, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சங்கர் தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர் 10 பேரும் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் சங்கர் கூறுகையில், “தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தாம்பரம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் 4 அம்மா உணவுகள் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களை திமுக அரசு சரியாக பராமரிக்கவில்லை. அம்மா உணவகத்தில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுகளை சமைப்பதற்கு உணவுப் பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

அதே நேரத்தில் தற்போது உணவுகள் தரமற்ற முறையில் சமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சியில் பணிகளை செய்ய டென்டர் மட்டும் விடப்படுகிறது. ஆனால், எந்தப் பணியும் முறையாக செய்யப்படவில்லை. மேலும், டெண்டர் விடப்படும் பணிகளுக்கு கமிஷன்கள் மட்டும் மேயர், துணை மேயர் வாங்கிக் கொண்டு மற்ற பணிகளை கவனிக்காமல் இருக்கின்றனர். கமிஷன் வாங்குவதில் தாம்பரம் மாநகராட்சி நம்பர் ஒன்றாக உள்ளது.

மேலும், தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ஆனால், அதை மாநகராட்சி கண்டுகொள்ளவே இல்லை. 70 வார்டுகளுக்கும் புதிய மின்விளக்குகள் மாற்றம் செய்யப்படவில்லை. அதேபோல் எந்த ஒரு பூங்காக்களும் பராமரிக்கப்படவில்லை. பொது கழிப்பிடங்கள் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி ஒன்றரை வருடத்திலேயே செயல் இழந்து விட்டது. இது குறித்து மாமன்ற கூட்டத்தில் பலமுறை புகார் அளித்துள்ளோம். இதற்கு மேயரோ, அதிகாரிகளோ மதிக்கவில்லை. இதற்கான தகுந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாக மாநகராட்சி கூட்டத்தைக் கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் வெளிநடப்பு செய்துள்ளோம். தாம்பரம் மாநகராட்சியின் போக்கை கண்டித்து இன்னும் ஒரு வார காலத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Senthil Balaji: செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details