தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடரும் - அமைச்சர் சிவசங்கர்! - chennai news

TN Transport Strike: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிதித் துறையுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 8:24 PM IST

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு

சென்னை:ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர்.

அப்போது தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது இதனால் வரும் ஒன்பதாம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் பொங்கல் நேரத்தில் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் யாரும் வேலை நிறுத்தம் செய்யாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அதன்படி இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் சிஐடியு, தொமுச அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சுமார் 20 தொழிற்சங்கங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

இதையடுத்துப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஒன்பதாம் தேதி முதல் காலவரை அற்ற போராட்டம் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக சிஐடியு தோமுச உள்ளிட்ட 20 தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் பதினைந்தாவது ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி உயர்வு உயர்த்தி தர வேண்டும் தொழிற்சங்கங்கள் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசியுள்ளனர்.

இந்த கோரிக்கைகளை நிதித் துறையுடன் ஆலோசனை செய்து முடிவு எட்டிய பிறகு தான் அறிவிக்கப்படும், என்பதால் நாளை மறுநாள் மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அனைத்து கோரிக்கைகளையும் ஒரே நாளில் எட்டி விட முடியாது பேசி முடிவெடுக்கப்படும்” என்றார்.

இது தொடர்பாக சிஐடியு தொழிற்சங்க தலைவர் சௌந்தர்ராஜன் கூறுகையில், “ பேச்சு வார்த்தைகள் மூலம் நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் தொழிற்சங்கத்தின் விருப்பம். இந்த பேச்சு வார்த்தையில் எங்களின் ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தங்களிடம் சமாதானம் பேசுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என தொழில் சங்கங்கள் ஒன்றாகத் தெரிவித்துள்ளோம்.

அமைச்சரிடமிருந்து பதில் வரும் வரை எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும். நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காகக் காத்திருப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரூ.1-க்கு 29 பைசா மட்டுமே.. மத்திய அரசை கடுமையாக சாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

ABOUT THE AUTHOR

...view details