சென்னை: இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டுமென்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி, நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
இது திட்டமிட்ட பயங்கரவாதச் சதி என்பதால் இதன் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்காகவும், தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்குவதற்காகவும் திட்டமிட்ட முறையில் பாஜகவும், அதனுடைய துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையிலான இந்த அரசில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற தோற்றத்தை அவர்கள் உருவாக்கப் பார்க்கிறார்கள்.
அத்துடன், முதலமைச்சருக்கு இந்திய அளவில் அவப்பெயரை உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள். ஒருபுறம் தமிழ்நாட்டில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரசாரத்தை மேற்கொள்வது, இன்னொரு புறம் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரைப் படுகொலை செய்கிறார்கள் என்று வதந்தி பரப்புவது என இரண்டு வகையில் சனாதன சக்திகள் இந்த சதி வேலையில் ஈடுபட்டிருக்கின்றன.
எனவே, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் செய்யப்படும் அவதூறுப் பிரசாரங்களைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானவர்கள் பிற நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.