தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஹில் ரமாணி இடமாற்றம் - வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு!

சென்னை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயாவுக்கு பணியிடமாறுதல் செய்ததை கண்டித்து சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tahil-ramani-relocation-issue

By

Published : Sep 10, 2019, 3:31 PM IST

உச்ச நீதிமன்ற தலைமை கொலிஜியம் குழு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாறுதல் செய்ய மத்திய அரசுக்கு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முடிவால் அதிருப்தியடைந்த நீதிபதி தஹில் ரமாணி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவிற்கும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார்.

அதில், மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாறுதல் செய்வது உகந்ததாக இருக்காது என்பதால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாகவும் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திங்கள் கிழமை தலைமை நீதிபதி தஹில் ரமாணி அமர்வில் 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், அவர் பணிக்கு வராததால் வழக்குகள் விசாரணை செய்யப்படாது என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றும் அதே நிலையே தொடர்கிறது.

இதனிடையே உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயாவிற்கு பணியிடமாறுதல் செய்வதை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால் நீதிமன்ற வழக்குகள் பாதிக்கப்பட்டன. ஏராளமான வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகி வழக்குகளை தள்ளிவைக்க நீதிபதிகளிடம் கோரிக்கைவைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

இதேபோல், தலைமை நீதிபதி பாரபட்சமான முறையில் பணியிடமாறுதல் செய்யப்படுவதாகக் கூறி கோவையில் மூன்றாயிரம் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த நீதிபதியான சுதாகரின் பெயர் விடுபட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சார்பில் மாவட்ட நீதிமன்ற வாயிலின் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று தலைமை நீதிபதியின் பணியிடமாறுதல் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில், பத்மனாபபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி நீதிமன்றங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 500 வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமை நீதிபதி தஹில் ரமாணி, தனது ராஜினாமா முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக பல நீதிமன்றங்களிலும் வழக்குகள் தேக்கமடைந்தன.

ABOUT THE AUTHOR

...view details