சென்னை:இந்திய- சீனா உறவு, விவசாயிகள் போராட்டம் என நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அது குறித்து அனைத்துக்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நிலையில் மத்திய அரசு குளிர்கால கூட்டுத் தொடரை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து, திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர் பாலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கரோனா நோய் தொற்றைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலையாய பிரச்னைகள்
“இந்திய - சீன உறவு மிக மோசமாகி, எல்லையில் பதற்றம் நிலவுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து இரவு பகலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவை இன்று நாட்டின் மிக தலையாய பிரச்னைகளாக அணிவகுத்து நிற்கின்றன.
இப்பிரச்சினைகள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த பாஜக அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
கவலைப்படாத அரசு
விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்னையாக மாறலாம் என்று எச்சரித்துள்ள உச்சநீதிமன்றம், திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் உள்ளது.