சென்னை:பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதனை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை, எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கு சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே மறுத்துவிட்டது. இந்நிலையில், தனக்கெதிரான இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றம் காட்டம் : வழக்கு விசாரணையின்போது எஸ்.வி.சேகர் தரப்பில் கலிஃபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவரின் பதிவைத்தான் தெரியாமல் எஸ்.வி சேகர் பார்வேர்ட் செய்ததாகவும், பின்னர் அந்த பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றிருந்ததால் உடனே அப்பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு ஆஜரான நடிகர் எஸ்.வி சேகர் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி தரப்பில், முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பியிருந்ததும், சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லி கொள்கிறார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
மௌன விரதம் என வாய்திறந்து பதில் : அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று (ஏப். 2) காலை சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி சேகர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் தனது வழக்கறிஞரான வெங்கடேஷ் மகாதேவனுடன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
விசாரணைக்குப் பின் வெளியே வந்த நடிகர் எஸ்.வி சேகரின் வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், நீதிமன்ற உத்தரவுபடி எஸ்.வி சேகர் விசாரணைக்கு ஆஜராகியதாகவும், இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை காவல்துறை முன்பு அளித்துள்ளதாகவும், இனி இந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வேண்டிய அவசியம் இருக்காது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது "நான் இன்று மௌன விரதம்" என அவரே கூறிக்கொண்டு காரில் ஏறி அங்கிருந்து சென்றார். இந்த வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சிஎம்ஆர் மானியத் தொகை ரூ. 4,446.14 கோடியை உடனடியாக வழங்குக' - மு.க. ஸ்டாலின்