சென்னை: பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து இழிவாக பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக, சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம்) போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி. சேகர் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு முன்னதாக நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பிலிருந்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட செய்தியை நீக்கியதாகவும், சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்பும் கேட்டதாகவும், நீதிமன்றத்தில் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.