பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்திவந்தனர். சித்ராவின் மரணத்துக்கு ஹேம்நாத்தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா உள்பட பலரும் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை இந்திய தண்டனைச் சட்டம் 306-இன்கீழ் காவல் துறையினர் நேற்று இரவு கைதுசெய்தனர். தற்போது, அவர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் கடந்த ஆறு நாள்களாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை சித்ரா எந்தளவு பிரபலமானாரோ அதே அளவிற்கு அதிகளவு கடன்களும் வாங்கியுள்ளார். திருவான்மியூரில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு கட்டவும், புதியதாக வாங்கிய சொகுசு காருக்கும் அதிகளவு கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்ததால் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது.
கடன்களைத் திரும்பச் செலுத்த அதிகளவில் பணம் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலையில், ஹேம்நாத்தை திருமணம் செய்துவைக்க விரும்பாத சித்ராவின் தாய், திருமணத்துக்கான செலவையும் அவரையே பார்த்துக்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் வேலைப்பளு அழுத்தத்தில் இருந்த சித்ரா ஹேம்நாத்திடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்காததால் விரக்தி அடைந்ததாகத் தெரிகிறது.