சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா வழக்கு தொடர்பாக ரவுடி சங்கரை ஆகஸ்டு 21ஆம் தேதி விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் தங்களைத் தாக்க முயன்றதாக கூறி ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி சங்கர் கொலை செய்யப்பட்டார்.
பின்னர், காவலர்கள் ரவுடி சங்கரை தாக்கி கொலை செய்துவிட்டு, என்கவுன்ட்டர் நாடகம் ஆடுவதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவுடி சங்கரின் தாய் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து என்கவுன்ட்டர் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டு தமிழ்நாடு அரசே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என தெரிவித்தது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உடற் கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை வெளியாகி பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் ரவுடி சங்கரின் உடலில் மூன்று குண்டு காயங்களை தவிர, 12 இடங்களில் காயங்கள் இருந்தது அம்பலமாகியுள்ளது. உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயங்களும், குறிப்பாக ரவுடி சங்கரின் பிறப்புறுப்பில் பலத்த காயம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சிபிசிஐடி காவல் துறையினர் என்கவுன்ட்டர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 13 காவலர்களுக்கு சம்மன் அனுப்பி பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.