யார் சூப்பர் ஸ்டார்? யார் உண்மையான ஹீரோ? என்ற கேள்விகளுக்கு பதிலாக சூர்யா என்ற பெயர் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறது. தனது பாடலுக்கு கூட டூப்பு போட்டு ஆடவைப்பவர், நடிக்கத் தெரியாதவர் என பெயர் பெற்ற சூர்யா, கடின உழைப்பால் இவை அனைத்தையும் மாற்றிக் காட்டினார். அவரது குரலுக்கு ஆதரவு அளிக்க இப்போது பெரும் மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது. இந்த சூழலில், அந்தக் குரல் யாருக்கானதாக இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சூர்யாவின் குரல் ஒடுக்கப்படும் மக்களின் குரலாய், பெரும்பான்மை தமிழர்களின் குரலாய் ஒலிக்கிறது.
தோழரைப் போற்று - நீட் எதிர்ப்பு
அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை வளர்த்தெடுப்பதோடு, கல்விக் கொள்கையை எதிர்ப்பது என சூர்யாவின் அரசியல் செயல்பாடு தமிழ்நாடு மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என தமிழ்நாட்டு மக்களை கல்வி முறை அநீதிக்கு எதிராக சூர்யா ஒன்றிணைக்க விரும்புகிறார். அர்ஜுனனை விட வில் வித்தையில் சிறந்து விளங்கிவிடுவான் என ஏகலைவனின் கட்டை விரல்களை கேட்டார் துரோணாச்சாரியார், கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் என்றார் கலைஞர் கருணாநிதி. துரோணர்களை சுட்டிக்காட்டி நீட் தேர்வையும், இன்றைய கல்வி முறையையும் விமர்சித்திருக்கிறார் சூர்யா.
மூன்று மாணவர்களை கொலை செய்த நீட் தேர்வு என்பது மனுநீதி தேர்வு என்கிறார். ‘இன்னும் மனுஷன துரத்துது, மனு சொன்ன நீதி’ என்ற கமலின் மருதநாயகம் பாடல் ஞாபகம் வருகிறது. அனிதா தொடங்கி இத்தனை பிள்ளைகளை நீட் தேர்வுக்கு காவு கொடுத்திருக்கிறோம். வறுமையில் பசியால் சாகும் கொடுமையை விட மோசமானது கல்வி முறையில் நிகழும் அராஜகத்தால் உயிரிழப்பது. வெகுஜன மக்களின் குரலாய் ஒலிப்பதன் மூலம் நடிகர் சூர்யா இன்று தோழர் சூர்யாவாக மாறியிருக்கிறார். அவரோடு ஒன்றிணைந்து இந்த அராஜக கல்வி முறைக்கு எதிராக குரல் கொடுப்பதும் எதிர்ப்பதும் அவசியம். அமைதியாக போராடுபவர்களை சமூக விரோதிகள் என சொல்லும் சில உச்ச நட்சத்திரங்களுக்கு மத்தியில், அநீதிக்கு எதிராக போராடும் மக்கள் குரலாய் மாறி நிற்கும் சூர்யா போற்றத்தகுந்தவரே...