சென்னை:நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தில் நடிகராக அறிமுகமானாலும், நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க அவருக்கு பல படங்கள் தேவைப்பட்டது. மேலும், நடிகரின் மகனாக சினிமாவில் நுழைந்தாலும், திறமையும் கடின உழைப்பும் இருந்தால் மட்டுமே திரைத்துறையில் சாதிக்க முடியும் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர், சூர்யா. மேலும், ஆரம்ப காலங்களில் தனது நடிப்பினால் விமர்சிக்கப்பட்டாலும் திறமையை வளர்த்துக்கொண்டு நல்ல நடிகராக உயர்ந்தார்.
பாலா இயக்கத்தில் நந்தா படம் தந்த நம்பிக்கையில், அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்து தற்போது தனக்கென ஒரு மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார். மேலும், ரசிகர்கள் படையும் அவர் வசம் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. கமர்ஷியல் மட்டுமின்றி ஜெய்பீம் போன்ற படங்களின் மூலம், சமூக அக்கறை உள்ள நடிகராகவும் தனது அகரம் அறக்கட்டளை மூலம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அளிப்பவராகவும் தனிப்பாதை போட்டு வருபவர்.
இந்நிலையில், இவரும் இயக்குனர் சிவாவும் மிகப்பெரிய படத்துக்காக இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத அந்தப் படம் தற்காலிகமாக 'சூர்யா 42' என்று அழைக்கப்படுகிறது. இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்றுப் படமாக இப்படம் உருவாகி வருகிறது. அதுமட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 10 மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.