தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மாவட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இன்றைய தினத்தில் மழை குறைந்துவிட்ட நிலையில் தற்போது ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று பொதுப்பணித்துறை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏரியின் நீர்மட்டம் மற்றும் மதகுகள் எப்படி உள்ளது என்பது குறித்து சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தார்.
நேற்று மழைப்பொழிவு இல்லாத நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போது ஏரிக்கு 480 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
ஏரியின் நீர்மட்டம் உயரம் 21.17 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,898 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இதன்பின்னர், மழை பொழிந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டம் 22 அடியைத் தொட்டால் மட்டுமே ஏரியிலிருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. எனவே தண்ணீர் திறப்பு குறித்து, பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், முறையான அறிவிப்பு கொடுத்த பின்னர் தான் உபரி நீர் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.