சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா தமிழில் துரோகி, இறுதிச் சுற்று, சூரரைப் போற்று ஆகிய திரைபடங்களை இயக்கியுள்ளார். இதில் இறுதிச் சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்கள் அவருக்கு மிகப் வெற்றியை பெற்று தந்தது. 2016ஆம் ஆண்டு நடிகர் மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஏர் டெக்கான் நிறுவனம் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான சூரரைப் போற்று படத்தை நடிகர் சூரியாவை வைத்து இயக்கினார். 2020ஆம் ஆண்டு கரோனா உச்சத்தில் இருந்ததால் இப்படமானது ஓடிடியில் வெளியிடப்பட்டது. இருப்பினும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார்.
மேலும், இப்படம் பல்வேறு விருதுகளை பெற்றது. இதனால் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா, துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படம் உறுவாகிறது. இது ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.