கடந்த 2012ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக தங்கம் ஏற்றுமதி இறக்குமதி செய்ததாக சவுக்கார்பேட்டையில் உள்ள சுராணா நிறுவனத்தில் சோதனை நடத்திய சிபிஐ சுமார் 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது இவ்வழக்கின் விசாரணை அலுவலராக சிபிஐ ஆய்வாளர் ரஞ்சித் சிங் இருந்தார். சுராணா நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் தங்கம் வைக்கப்பட்டு சீலிடப்பட்டிருந்தது. அதன் பிறகு சுராணா நிறுவனம் வங்கி கடனை செலுத்த முடியாத காரணத்தால், லாக்கர்களில் உள்ள தங்கத்தை எஸ்.பி.ஐ வங்கியிடம் ஒப்படைக்க சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதற்காக கடந்த ஆண்டு சிபிஐ ஆய்வாளர் மாணிக்கவேல், எஸ்.பி.ஐ வங்கி மேலாளர்கள் இருவர், சாட்சிகள் முன்னிலையில் லாக்கர்கள் திறக்கப்பட்ட போது 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் தங்கம் திருடப்பட்ட விவகாரம் தாமதமாகத்தான் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் திருட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கரில் கள்ளசாவி போட்டு தங்கம் திருடப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். லாக்கர்கள் இருந்த சுராணா நிறுவனத்தில் சிபிசிஐடி டிஜிபி பிரிதீப் வி. பிலிப் உள்பட அதிகாரிகள் தடயவியல் துறை நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில் சிபிஐ ஆய்வாளர் ரஞ்சித் சிங்கிடம் கடந்த வாரம் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். 2012ஆம் ஆண்டில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது மகஜர் தயாரித்தது அவர் தான் என்பதால் விளக்கம் கேட்டு விசாரித்தனர்.
மற்றொரு ஆய்வாளர் மாணிக்கவேலை இன்று (ஜன. 19) சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு லாக்கரை திறந்து தங்கத்தை எஸ்பிஐ வங்கியிடம் ஒப்படைக்கும் பணியை இவர்தான் செய்துள்ளார். அந்த அளவீடும் பணியின்போது 103 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எஸ்பிஐ வங்கி மேலாளர்கள் இருவர் உடனிருந்துள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க... சென்னை விமான நிலையத்தில் ரூ. 85 லட்சம் மதிப்பிலான 1.42 கிலோ தங்கம் பறிமுதல்...!