கடந்த 2012ஆம் ஆண்டு சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி செய்ததாக சென்னை சௌகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் இருந்து 400.47 கிலோ மதிப்புள்ள தங்க கட்டிகள், நகைகள் ஆகியவற்றை சிபிஐ அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் சீல் வைக்கப்பட்டு சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்தது. பிறகு அதில் 103.864 கிலோ தங்கத்தை காணவில்லை என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிபிசிஐடி திருட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி எஸ்.பி விஜயக்குமார், டிஎஸ்பி-க்கள் சத்தியசீலன், கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் சுரானாநிறுவனத்தில் இன்று (டிச.29) ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது எஸ்பிஐ வங்கி தரப்பில் அங்கீகரிக்கப்பட்ட நபரான ராமசுப்ரமணியன், பத்திரப் பதிவு துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்கு பிறகு அலுவலர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்த ஆய்வின்போது சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த லாக்கர்களில் கள்ளச்சாவி பயன்படுத்தி தங்கம் திருடப்பட்டிருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று தளங்களில் உள்ள ஆறு லாக்கர்களில் மூன்று லாக்கர்களில் 400 கிலோ தங்கம் வைக்கப்பட்டு சீலிடப்பட்டிருந்தது. அதில் இரண்டாவது தளத்தில் உள்ள லாக்கரில் இருந்து 100 கிலோ தங்க நகையும், முதல் தளத்தில் உள்ள லாக்கரில் இருந்து 3 கிலோ தங்கம் திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்டது உறுதியாகியுள்ளதால் திருடியது யார்? 2012லிருந்து பிப்ரவரி 2020 வரையிலான காலகட்டத்தில் எப்போது திருடப்பட்டுள்ளது என அடுத்தகட்ட விசாரணையில் சிபிசிஐடி இறங்கியுள்ளது.
இதனிடையே சுரானா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் விஜய்ராஜ் சுரானா சிபிசிஐடி அலுவலர்கல் முன்பு ஆஜராகி பரபரப்பு மனு ஒன்றை அளித்துள்ளார்.