சென்னை: தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம், அதன் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 3) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பிறகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், “இந்தியாவில் 2070ஆம் ஆண்டில்தான் ‘கார்பன் சமநிலை நாடு’ என்ற பெயரை எட்டும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிலேயே முதல் கார்பன் சமநிலை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையைக் கருத்தில் கொண்டு மூன்று திட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்துள்ளோம். தமிழ்நாட்டின் வனப்பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்துவதற்காக, 2 கோடியே 50 லட்சம் மரக்கன்று பதியம் போடப்பட்டு, நடவு செய்கின்ற பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பசுமை தமிழகமாக மாற்றுவதே முதல் இலக்கு.
கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே, கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க ஆய்வு மேற்கொள்வதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இதனையடுத்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன், ''வெப்ப அலைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த துணைக் குழுக்கள் அமைக்கப்படும். இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றம், அதனால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.
காலநிலை மாற்றத்தால் வெப்ப அலை எந்த அளவுக்கு மக்களைப் பாதிக்கிறது என்பது குறித்து எடுத்துரைத்தோம். வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பாக கட்டட தொழிலாளர்கள், மீனவர்கள் போன்றோர் வெப்ப அலைகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுப்பது மற்றும் வெப்ப அலைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.