சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த தீர்மானங்கள் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையில், தனி நீதிபதி நள்ளிரவில் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ததையடுத்து, அந்த விசாரணையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு மீதான வாதங்கள் நடந்துவந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி தரப்பு இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஹரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு, அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளரை கட்சியின் அவைத்தலைவர் தலைமையில் கூட்டப்படும் பொதுக்குழுவில் தேர்தெடுக்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.