சென்னை:வருண் குமார் 2011ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் இந்தியா காவல் பணிக்குத் தேர்வாகினார். வருண் குமார் 2010ஆம் ஆண்டு சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும்போது பிரியதர்ஷினி என்ற பெண்னை காதலித்துள்ளார். மேலும் அவரின் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகி, இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள தயாராகி வந்த நிலையில் வருண் குமாரின் பெற்றோர் அதிக வரதட்சணை கேட்டுள்ளனர். இதுகுறித்து பிரியதர்ஷினி வருண் குமாரிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வருண் குமார் பிரியதர்ஷினியை மிரட்டியும், அவரது மின்னஞ்சலை ஹேக் செய்து இருவருக்குமிடையே நடையெற்ற உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை வருண்குமார் அழித்தாகவும் பிரியதர்ஷினி புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் முதலில் வழக்குப் பதியவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால், வருண் குமார் மீதான புகாரில் வழக்குப் பதியப்படவில்லை எனக்கூறி பிரியதர்ஷினி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வருண் குமார் மீதும், அவரது தாய் கல்பனா மற்றும் தந்தை வீரசேகரன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வருண் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் காவல் அதிகாரி வருண் குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கு சுமார் 12 ஆண்டுகள் காலம் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள விரும்புவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தரப்பில் மனுதாரர் பிரியதர்ஷினியின் வழக்கறிஞர் விகஸ் சிங்கை அணுகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்கவும்; காவல் அதிகாரி வருண் குமார் ஒத்துக்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சமரச விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து சில நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த வழக்கில் சமரச உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மனுதாரர் பிரியதர்ஷினியின் சட்டப்போராட்டத்துக்காகவும், நேர விரயம் ஏற்பட்டதற்காகவும், நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதற்காகவும் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை காவல் அதிகாரி வருண் குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் அந்த இழப்பீட்டுத் தொகையை மனுதாரர் ப்ரியதர்ஷினி தனக்கென பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்ததோடு, அதனை உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் நல நிதிக்கு வழங்க ஐ.பி.எஸ். அதிகாரி வருண் குமாருக்கு நிபந்தனை வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது.