சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜன.31) தொடங்க உள்ளது.
இதனிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக அறிவித்தனர்.
அதற்கான பணிக்குழுவமையும் நியமித்தனர். ஆனால் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தவிடுமாறு ஈபிஎஸ் தரப்பில் ஜனவரி 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.