பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார். பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு, ஒரு மாதம் பரோல் வழங்கிய நீதிமன்றம் பின்னர் மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்தது. பரோல் முடிந்து ஜனவரி 12ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார். இதனிடையே, தன் தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜிவ் காந்தியை கொலைசெய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால், அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது மனுவில் கூறியிருந்தார்.