சென்னை:தமிழ் திரைப்படங்களானகிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றியவர் விக்னேஷ்(50). இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கிண்டி தொழிற்பேட்டையில் தனக்குச் சொந்தமான கட்டடத்தில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருவதாகவும், அந்த கடைக்கு சைரன் வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்புடன் வாடிக்கையாளரான ராம் பிரபு என்பவர் அடிக்கடி வருவார்.
அப்போது துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எதற்கு எனக் கேட்டதற்கு, இந்திய அரசாங்கத்தின் அனுமதியோடு ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்திற்கு 3 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்றதால் தனக்கு பாதுகாப்பு வழங்கியதாக ராம் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் ராம் பிரபு இரிடியம் தொழிலில் 5 கோடி ரூபாய் முதலீடு செய்தால் 500 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் தன்னை முதலீடு செய்ய கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் ராம் பிரபு இரிடியம் குறித்த கருத்தரங்கு கூட்டத்திற்கு தன்னை அழைத்துச் சென்று, அங்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், ஓய்வுபெற்ற கர்னல் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தினார் என்றும், இரிடியம் சட்டபூர்வமான தொழில் என ராம் பிரபு தன்னை நம்ப வைத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.