சென்னை:திமுக விவசாய அணியின் துணைச் செயலாளர் நல்ல சேதுபதியின் இல்லத் திருமண விழா, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பேரறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்றது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக சட்டமன்றத்திற்கு முதல் முறையாக வந்து, சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். எனவே, இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்த சீர்திருத்த திருமணம் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்கிற அங்கீகாரத்தோடு நடந்திருக்கிறது.
எந்த தேர்தல் வந்தாலும் அதில் நான்தான் போட்டியிடுவேன், எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று நல்லசேதுபதி உரிமையோடு கேட்பார். அவ்வாறு வரும் நேரங்களில் கலைஞர் கருணாநிதி தலைமைக் கழகத்துக்கு அழைத்து, அவரை சமாதானம் செய்து திருப்தியாக அனுப்பி வைப்பார். இயக்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறந்த செயல்வீரராக நல்லசேதுபதி உள்ளார்.
கருணாநிதி நூற்றாண்டு விழா ஜூன் 3ம் தேதி தொடங்கும் நிலையில், ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, அதையும் தாண்டி, 2024-ல் வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே பூத் கமிட்டிகளை அமைக்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்திருக்கிறோம். எனவே, அந்த இலக்கை நாம் நிறைவேற்றினால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும். அதை மனதில் நீங்கள் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் நேரத்தில் அளித்த அத்தனை உறுதி மொழிகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நிதிநிலை ஒரு கொடுமையான பற்றாக்குறையாக இருந்தாலும், இன்றைக்கு மத்திய அரசு நமக்குத் தேவையான அளவிற்கு துணை நிற்காவிட்டாலும், அதை எல்லாம் தாண்டி அதை எல்லாம் மீறி, இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக – முதலிடத்திற்கு வரும் மாநிலமாக நம்பர் ஒன் முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒரு மாநிலமாக நாம் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறோம். வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.