சென்னை: நெட்ஃபிக்ஸ் (NETFLIX) தளத்தில், தமிழில் வெளியாகியுள்ள "நவரசா" ஆந்தாலஜி தொடர் ரசிகர்கர்களிடம் திருவிழா போன்ற கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 ரசங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள 9 கதைகளும் பாராட்டுக்களை குவித்து வருகின்றன.
இதில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள "புராஜக்ட் அக்னி" பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறது. இப்பகுதியில் 'கல்கி' பாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் சாய் சித்தார்த் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
ரசிகர்களை ஈர்த்த சாய் சித்தார்த்
கதாபாத்திரத்தை மிக எளிதாக அவர் கையாண்டுள்ள விதம், அவரது உடல் மொழி, கச்சிதமாக கதைக்குள் பொருத்திய தன்மை, என அனைத்தும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு, பாராட்டு பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் ரகுவரன், பிரகாஷ் ராஜ் என மிகச்சிறந்த வில்லன்கள் கோலோச்சியுள்ளனர். அந்தவகையில் தற்போது தனது கவர்ச்சிகரமான வில்லத்தனத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார் சாய் சித்தார்த்.
சூப்பர் வில்லன் சாய் சித்தார்த் இவரது நடிப்பை பல இயக்குநர்கள் பாராட்டி, தங்கள் படங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கி வருகின்றனர். விரைவில் வெள்ளித்திரையில் அவரது பிரமாண்ட தோற்றத்தை காணலாம்.
மறக்க முடியாத அனுபவம்
இது குறித்து நடிகர் சாய் சித்தார்த்திடம் கேட்டபோது, “புராஜக்ட் அக்னி பகுதியில் எனது நடிப்பிற்கு கிடைத்து வரும் பாராட்டுக்கள், மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. எனது பாத்திரம் இவ்வளவு வரவேற்பை பெறும் என நான் நினைக்கவில்லை.
இப்போது கிடைத்து வரும் பாராட்டுக்கள் எனக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. பன்முக திறமை கொண்ட அற்புதமான நடிகர்களான அர்விந்த் சாமி, பிரசன்னா ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்” எனக் கூறினார்.
மேலும் வில்லனாக நடிக்க யார் உந்துதலாக இருந்தார்கள் எனும் கேள்விக்கு உடனடியாக, “அஜித் சார் தான். ஒவ்வொரு முறையும் அவர் திரையில் வில்லத்தனம் செய்யும் போது நான் என்னையே மறந்துவிடுவேன்” என்றார்.
இதையும் படிங்க: விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி ஓடிடியில் வெளியீடு!