சென்னை:அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக் காலத்தில், பல்வேறு வகையான முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. அதன் மீது அரசின் சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பதவிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சட்டப்பேரவை பொதுத் தணிக்கைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா 2018ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து பெறுவதில் அதிமுக ஆட்சிக்கும், துணைவேந்தருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றது. துணைவேந்தராக சூரப்பா இருந்தபோது ஏற்பட்ட மோதல் காரணமாக, பொறியியல் மாணவர்கள் சேர்க்கை அண்ணா பல்கலைக்கழகத்திடம் இருந்து தொழில்நுட்பக் கல்வி இயக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரசின் அனுமதியைப் பெறமால் சிலத் திட்டங்களை செயல்படுத்தியதால் விதிமீறல்கள் நடைபெற்றதாகவும், அதனால் அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், முறைகேடுகளும் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் சூரப்பா துணைவேந்தராக இருந்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதா? என்பதை விசாரணை செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், பணி நியமனங்களில் பணம் பெற்றதாகவும், கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது உள்ளிட்டப் பல புகார்கள் குறித்து விசாரித்து, விசாரணைக் குழு ஆய்வு செய்து அறிக்கையை அளித்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் தமிழக அரசிடம் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை கலையரசன் சமர்ப்பித்துவிட்ட நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.