சென்னை: தமிழ்நாட்டில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் 5பேர் கொண்ட குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விதிகளை எதிர்த்த வழக்குகளில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் மற்றும் நீதிபதி மாலா அமர்வு பிறப்பித்த 93 பக்க தீர்ப்பின் சாராம்சம்:
அறங்காவலர்கள் இல்லாத கோயில்களை நிர்வகிக்க தக்கார்களை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. தக்கார்கள் அறங்காவலர்களின் பணியை மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன விரோதம் ஏதுமில்லை. அதே சமயம் நீண்ட காலத்திற்கு தக்கார்கள் மூலமாக கோயில்களை நிர்வகிப்பதை விடுத்து, அறங்காவலர்களை விரைந்து நியமிக்க வேண்டும்.
அர்ச்சகர் நியமனத்துக்கு கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட தகுதிகளை நிர்ணயிக்கும் வகையில் வகுக்கப்பட்டுள்ள விதிகள் அர்ச்சகர்களுக்கு மட்டுமல்லாமல் கோயில் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதால், இந்த விதிகளை ரத்து செய்தால், அது மற்ற பதவிகளுக்கான நியமனங்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் இல்லாமல் ஆகிவிடும்.