சென்னை: மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவியான அதிதி சிங் அளித்த புகாரின் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த 5-ஆம் தேதி லீனா மரியா பாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தனது கணவரான ஷிவிந்தர் மோகன் சிங்கை சிறையிலிருந்து ஜாமீனில் எடுக்க உதவுவதாகவும், அதற்காக ரூ. 200 கோடி தன்னிடம் பெற்றதாகவும் சுகேஷ் சந்திரசேகர் மீது அதிதி சிங் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்து கொண்டே தனது காதலியான லீனா மரியா பால் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் லீனா மரியா பால் மற்றும் சுகேஷின் உதவியாளர்களான கமலேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் முத்து, மோகன்ராஜ் ஆகியோரையும் டெல்லி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.