சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது அண்மைக் காலமாக காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும் மாறி மாறி வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (செப்.12) அறிவித்திருந்தது. இதன் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்தது.
சென்னையைப் பொறுத்தவரை சென்னை நகர் மற்றும் அதன் புறநகரிலும் மழையானது விட்டு விட்டு பெய்தது. மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளான மதுரவாயில், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனை அடுத்து சிறிது நேரம் பெய்த கனமழை காரணமாக சென்னையின் சில தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆனது தேங்கியது. அதேப்போல் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் சாலையில் வெள்ளம் போல் மழை நீரானது ஓடியது.
மின்சாரம் துண்டிப்பு:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த மழையால் அம்பத்தூர், அயப்பாக்கம், ஆவடி ஆகிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சென்னை வானிலை மையம்: மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த மூன்று தினங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம்!