தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Rains: சென்னையில் திடீர் மழை.. விமான சேவை பாதிப்பு.. வானில் வட்டமடித்த விமானங்கள்! - chennai rains

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

Chennai rain
சென்னையில் மழை

By

Published : Apr 22, 2023, 6:16 PM IST

Updated : Apr 22, 2023, 6:24 PM IST

சென்னை:சென்னையில் இன்று (ஏப்ரல் 22) காலை, வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. பிற்பகலில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு, மேகக்கூட்டங்கள் உருவாகின. இதைத் தொடர்ந்து எழும்பூர், காமராஜர் சாலை, திருவல்லிகேணி, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் இடி, மின்னலுடன் பெய்த மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 72 பயணிகளுடன் பிற்பகல் 3.30 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ பயணிகள் விமானம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 137 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தூத்துக்குடியில் இருந்து 70 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

ஜோத்பூரில் இருந்து 124 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், துர்காபூரிலிருந்து 154 பயணிகளுடன் வந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் விமானமும் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தன. சுமார் அரைமணி நேரம் 5 விமானங்களும் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு வானிலை சீரானது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

இதேபோல், மழை காரணமாக சென்னையில் இருந்து கோவை, ஷீரடி, கோவா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதையும் படிங்க: TN Weather: 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Last Updated : Apr 22, 2023, 6:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details