தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுபஸ்ரீ வழக்கு - ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் ஒத்திவைப்பு!

பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Subhashree case

By

Published : Oct 17, 2019, 3:54 PM IST

Updated : Oct 17, 2019, 4:39 PM IST

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான விதிமீறி பேனர் வைத்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல்துறையும், பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையும் வழக்கு பதிவு செய்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு செப்டம்பர் 27ஆம் தேதி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 28 அன்று நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்களின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் அக்டோபர் 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது. பின்னர் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, அக்டோபர் 15இல் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை ஒத்திவைத்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், உங்கள் வீட்டு மருமகளை வரவேற்று விதிமீறல் பேனர் வைத்து, இன்னொரு வீட்டின் மகளை கொன்றுள்ளீர்கள் என மேகநாதன் தரப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விதிமீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் அக்டோபர் 23ஆம் தேதி விசாரணைக்கு வருவதால், ஜாமீன் மனுவை அதன்பின்னர் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

விதிமீறல் பேனர் வழக்கிற்கும், ஜாமீன் வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மனுக்களை விசாரிக்க வேண்டுமென ஜெயகோபால், மேகநாதன் தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர் காவல்துறை தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் வாசிங்க:#67YearsOfParasakthi - பகுத்தறிவு பேசிய 'பராசக்தி'

Last Updated : Oct 17, 2019, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details