சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ(23) தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, பள்ளிக்கரணை - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பேனர் விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் 308, 279, 304 ஆகிய இந்திய சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன், லாரி ஓட்டுநர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.