தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒன்றிய அரசே, செவி மடு! தமிழ்நாட்டிற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு' - சு. வெங்கடேசன் - central minister harsh vardhan

தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எம்.பி சு.வெங்கடேசன், கடந்த இரண்டு நாள்களில் இரண்டாவது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.

Su Venkatesh
சு. வெங்கடேசன்

By

Published : May 8, 2021, 1:20 PM IST

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு, சு.வெங்கடேசன் எம் பி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, " நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமருக்கு மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் நெருக்கடி குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் ஒதுக்கீடை உடனடியாக வழங்குமாறும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தமிழ்நாட்டின் புதிய முதல்வரின் முதல் கடிதம். தமிழக மக்களின் உயிர்களைக் காப்பாற்ற பிரதமரின் உடனடி தலையீட்டை கோரியுள்ளார்.

ஆனால் ஒன்றிய அரசின் துறை அதிகாரிகள் உடனான விவாதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒதுக்கீடான 476 மெட்ரிக் டன் 5 நாட்கள் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை என்பது வேதனைக்குரியது. தற்போது ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன்னாகவே உள்ளது. தினமும் கோவிட் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஒரு நாள் தாமதம் கூட பல உயிர் இழப்புகளை விலையாய் கேட்கின்றன. முதல்வர் தனது கடிதத்தில், செங்கல்பட்டில் 13 உயிர்கள் வீழ்ந்த துயரத்தை குறிப்பிட்டுள்ளார். எனது முந்தைய கடிதத்திலும் அந்த பெருந்துயர் இடம் பெற்றிருந்தது. முதல்வர் கடிதத்தில், ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக இன்னும் இரண்டு வாரங்களில் உயரும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் இங்கு மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில், ஒன்றிய அரசு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக செயலாற்ற வேண்டிய நெருக்கடி மிக்க நேரம். ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். நிர்வாக இடைவெளிகள், ஆதார ஏற்பாடுகளின் குறைபாடு ஆகியவற்றால் மனித உயிர்கள் வீழ்வது கூடாது.

நான் முதல்வரின் அனைத்துக் கோரிக்கைகளையும் முழுமையாக ஆதரிக்கிறேன். அக்கடிதத்தின் ஒவ்வொரு வரியும் தமிழகத்தின் கள நிலைமையைப் பிரதிபலிக்கின்றன. ஒன்றிய அரசின் கவனம் உடனடியாக ஈர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள்.

நான் வலியுறுத்துவது

1) ஏற்றுக் கொண்ட ஆக்சிஜன் ஒதுக்கீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

2) தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடன் உயர்த்த வேண்டும்.

3) ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். ஆதார ஏற்பாடுகளான ஐ.எஸ். ஓ கிரையோஜினிக் சாதனங்கள், ரயில்கள் உறுதி செய்யப்பட வேண்டும். "

ஒன்றிய அரசே, செவி மடு! தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு! " என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details