இது தொடர்பாக தொல்லியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் தொல்லியல் மனித வளத்தை பெருக்கிட கடந்த 1974ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்வெட்டு பயிற்சி நிறுவனம், தற்போது தொல்லியல் சார் பாடங்களில் அண்மைக்கால வளர்ச்சியினையும், நவீன தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் தனது பயணத்தைத் தொடர்கிறது.
அதன் அடுத்தக்கட்ட முயற்சியாக, தற்போது தனித்த நிறுவனமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் நிறுவனம் என்ற பெயரில் புதிய கல்வித் துறைசார் நிறுவனத்தை அரசு தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் மூலமாக பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள பாடத் திட்டங்களுக்கு இணையாக புதிய பாடத் திட்டங்களுடன் ஈராண்டு முழுநேர 'தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்பு' ஒன்றை தற்போது அறிமுகப்படுத்துகிறது.
இதுவரை கல்வித் தகுதியாக தமிழ், வரலாறு, தொல்லியல் முதலான பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆனால், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பன்முகத் தன்மை வாய்ந்த தொல்லியல் போக்குகள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு இனி முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியலில் குறைந்தது 55 விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவர்களும் முதுநிலை தொல்லியல் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொல்லியலில் சிறந்த மாணவர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. பயிலுதவித் தொகை ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.