சென்னை: எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் லயன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்ட உபகரணங்களைத்தொடங்கி வைத்தும், கண் தானம் செய்த குடும்பத்தினரை கெளரவித்தும், பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'லயன்ஸ் கிளப் மூலம் நடத்தப்படும் கண் வங்கிக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லயன்ஸ் கிளப் சார்பில் கண்கள் தானாமாக பெறப்பட்டுள்ளன. உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 3 லட்சம் கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,41,073 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 7 ஆயிரம் கண்கள் தானமாக பெறுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், 3,203 கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. 1,526 கருவிழிகள் கண் கருமாற்று அறுவை சிகிச்சைக்கு பெறப்பட்டு இருக்கின்றன.
பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 2 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் கண் பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. தேசிய பார்வை இழப்பினைத் தடுப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது.
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதா சட்டத்துறையின் மூலம் மே மாதம் 5ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா மீது ஜூலை 25ஆம் தேதி ஆளுநரின் முதன்மைச்செயலாளர், தமிழ்நாடு சித்த மருத்துவப்பல்கலைக்கழக சட்ட மசோதாவில் உள்ள மாணவர்கள் சேர்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகள் இந்திய மருத்துவ தேசிய ஆணைய சட்டம் 2020இல் உள்ள சட்டப்பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா என்பதை ஆராய்ந்து குறிப்புரை வழங்க கடிதம் அனுப்பி இருந்தார்.
இது குறித்து சட்ட வல்லுநர்களின் கருத்து பெறப்பட்டு, ஆளுநரின் முதன்மைச்செயலாளருக்கு சட்டத்துறை செப்டம்பர் 17ஆம் தேதி விரிவான பதில் அனுப்பி உள்ளது. அதில் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட மசோதாவின் பிரிவுகளுக்கும், இந்திய மருத்துவ தேசிய ஆணையச்சட்டம் 2020 மற்றும் ஹோமியோபதி தேசிய ஆணைய சட்டப்பிரிவுகளுக்கும் முரண்பாடு இல்லை என விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
நிச்சயம் இந்த கருத்துகளை ஏற்று ஆளுநர் விரைவில் தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க அனுமதியை அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.