இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வித் துறை, தொடக்ககல்வித் துறை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
'ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் அவர்களது பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிமுறைகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கு முன்னர் தொற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் கற்பிப்பது குறித்து மாணவர்கள், பெற்றோருக்கு, ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். மாணவர்களின் உடல்நலத்தினை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் தங்கள் உடல் சீரான இடைவெளியில் நீட்டவும், சுழற்றவும், அடிக்கடி கண்களை சிமிட்டவும், மின்னணு உபகரண சாதனங்களை சரியான நிலையில் வைத்து உபயோகிக்கவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கும், ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இணையாக பாடங்களில் பயிற்சி வழங்குவதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்று தேவைக்கேற்ற கூடுதல் வகுப்புகளை நடத்தி உறுதிப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வீட்டுப் பாடங்கள் மற்றும் மதிப்பெண்கள் ஏதும் தரம், மதிப்பெண்கள், செயல்திறன் மதிப்பீடு போன்றவற்றை கணக்கிடுவதற்கு கட்டாயமாக்கப்படாது.