சென்னை ஐஐடியில் தானியங்கி வாகனம் வடிவமைப்பு! சென்னை:சென்னை ஐஐடியின் மாணவர்களின் ஆண்டு கண்டுபிடிப்புகள் கண்காட்சி நேற்று (மார்ச்.12) நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் மாணவர்களின் 70 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்தக் கண்காட்சியை திறந்து வைத்து ஐஐடி இயக்குனர் காமகோடி பார்வையிட்டார். மேலும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டறிந்து பாராட்டினார்.
சென்னை ஐஐடியின் மாணவர்கள் அபியான்( Abhiyaan) என்ற தானியங்கி காரை வடிவமைத்துள்ளனர். இந்த கார் சென்சார் உதவியுடன் எதிரில் உள்ள பொருட்கள் மீது மோதாமல் செல்லும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை ஓட்டத்தை சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி துவக்கி வைத்தார். இந்த கார் நிர்வாக அலுவலகத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் ஆளில்லாமல் வந்து சேர்ந்தது.
இது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி கூறும்போது, "சென்னை ஐஐடியில் மாணவர்களின் கண்டுடிப்பிடிப்புகளில் பொறியியல் துறையின் பல்வேறு பிரிவுகள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எலக்ட்ரிக்கல் கார், சூரிய சக்தியில் இயங்கும் வாகனம் உள்ளிட்டவற்றை கண்டறிந்துள்ளனர். சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்டுள்ள தானியங்கி வாகனத்தை முதலில் வளாகத்தில் பேருந்துக்கு மாற்றாக ஒட்டலாமா? என சோதனை செய்ய உள்ளோம்.
அதன் சோதனையின் பின்னர் அடுத்தக் கட்டத்திற்கு செல்லலாம். தானியங்கி வாகனத்தை சாலையில் இயக்குவதற்கு நிறைய ஒழுங்கு விதிமுறைகள் தேவைப்படுகிறது. சாலையில் தானியங்கி காரை இயக்குவதற்கு கொஞ்சம் நாள் ஆகும். தானியங்கி கார் கடந்த ஆண்டு மாணவர்கள் கட்டுப்பாட்டுடன் இயக்கப்பட்டது. இந்தாண்டு முழுவதும் தானகவே இயங்குகிறது. வரும் ஆண்டில் வளாகத்திற்குள் அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், "சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களின் தொழில்நுட்ப ஆலோசனை குறித்து விவாதிக்கலாம். பிஎஸ் டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் ஐடியா இருந்தால் தெரிவிக்கலாம். அடுத்த 10 ஆண்டுகளில் மெட்டீரியல் சயின்ஸ், பயோ சயின்ஸ், பயோடெக் , பயாலாஜிக்கல் சயின்ஸ் போன்றவற்றிக்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே, ஜெஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் டாப்பராக வர வேண்டும் என்ற டென்சன் இல்லாமல் ஜாலியாக தேர்வினை எழுதுங்கள். பொறியியல் பாடப்பிரிவில் எந்தப்பிரிவினை எடுத்தாலும் சிறப்பாக வந்துவிடலாம்" என தெரிவித்தார்.
சென்னை ஐஐடியின் புத்தாக்க மையத்தின் ஆலோசகரான பிரபு ராஜகோபால், "இந்த புத்தாக்க மையம் சென்னை ஐஐடிக்கு சொந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட சுதா மற்றும் சங்கர் புத்தாக்க மையம் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைக்கப்பட்டது. அதனால், புத்தாக்க மையத்தின் திறந்தவெளி நிகழ்வு - 2023 ஆற்றல் நிரம்பியதாகவும், அற்புதமாகவும், புதிய உத்வேகமுடையதாகவும் அமைந்துள்ளது. தானியங்கி வாகனம் முழுவதும் வடிவமைக்கப்பட்டு, நிர்வாக அலுவலத்தில் இருந்து புத்தாக்க மையம் வரையில் வந்துள்ளது. வரும் ஆண்டில் வளாகத்தில் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். மேலும் சூரியசக்தி மூலம் இயங்கும் வாகனமும் வடிமைத்துள்ளோம். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டியில் கலந்துக் கொள்ள உள்ளது.
முழுமையாக பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக்கல் வாகனம் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற பார்முலா பாரத் என்ற பந்தயகார்களுக்கான போட்டியில் ஒரே ஆண்டில் 3 வது இடத்திற்கு வந்துள்ளது. மற்ற குழுக்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளனர். மனித கழிவுகளை ரோபோ இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் வணிக நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. 18 ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் தாட்கோ நிறுவனம் எங்களுடன் பேசி வருகின்றனர்" என தெரிவித்தார்.
சென்னை ஐஐயின் அபியான் (Abhiyaan) தானியங்கி கார் வடிவமைப்பு குழுவின் கவுஷிக் கூறும்பாேது, ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி காரை 35 பேர் இணைந்து வடிவமைத்து வருகிறோம். எங்களின் நாேக்கம் முதலில் வாளகத்தில் ஓராண்டிற்குள் ஆளில்லாமல் இயக்க வேண்டும் என்பதாகும். இதனைத்தொடர்ந்து விமான நிலையம், கல்லூரிகளின் வளாகம் போன்றவற்றில் இயக்க திட்டமிட்டுள்ளோம். பல்வேறு நிறுவனங்களில் விபத்துகள் நடைபெறுகிறது.
சாலையில் செல்லும் போது, மனிதர்கள் செய்யும் தவறால் விபத்துகள் நடைபெறுகிறது. ஆனால், தானியங்கி வாகனத்தில் கம்ப்யூட்டர் மூலம் சுற்றி உள்ள பொருட்களை அறிந்து எவ்வாறு இயங்கலாம் எனவும் வடிவமைத்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலும் தானியங்கி வாகனம் கொண்டு வர முடியும்.
இந்த வாகனம் முற்றிலும் பேட்டரியால் இயக்கப்படுகிறது. ஒரு முறை பேட்டரி சார்ஜ் போட்டால் 80 கிலோ மீட்டர் தூரம் வரையில் செல்ல முடியும். சென்சார் கேமரா பொருத்தப்பட்டு, அதன் மூலம் வாகனம் செயல்களை முடியும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொதுத் துறை வங்கிகள் தனியார் மையம்? - பஞ்சாப் நேஷனல் வங்கி மாநாட்டில் கண்டனம்!